மணற்கேணி செயலியை பயன்படுத்தி வகுப்பறைகளில் கற்பித்தல் செயல்பாடுகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: மாநில பாடத்திட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையான கணிதம் மற்றும் அறிவியல் புத்தகங்களில் உள்ள பாடங்களுக்கான காணொலி காட்சிகள் தமிழ், ஆங்கில வழியில் அனிமேஷன் வீடியோக்களாக மணற்கேணி செயலியில் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக 11, 12-ம் வகுப்பில் உள்ள ஒவ்வொரு பாடப் பொருளும், அதற்கு அடிப்படையாக 6 முதல் 10-ம் வகுப்பு வரையான பாடப்பொருட்களுடன் தொடர்புபடுத்தி வழங்கப்பட்டுள்ளது.
வரும் கல்வியாண்டில்(2024-25) அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. எனவே, திறன் வகுப்பறைகள், கணினி ஆய்வகங்களில் மணற்கேணி இணையதள முகப்பின் வழியாக கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை பயிற்றுவிக்க ஏதுவாக ஸ்மார்ட் பலகையில்(Smart Board) அனிமேஷன் வீடியோக்களை பாடவாரியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் 6 முதல் 8-ம் வகுப்பு பாடங்களுக்கான அனிமேஷன் வீடியோக்களில் உள்ள பாடக் கருத்துக்கள் மற்றும் அந்த வீடியோக்கள் சரியாக உள்ளனவா என்பதை முன்கூட்டியே சரிபார்த்து கொள்ள வேண்டும்.
அதேபோல், ஆசியர்கள் தங்கள் செல்போனில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதற்கான மணற்கேணி க்யூஆர் கோடு இணைக்கப்பட்டுள்ளது. அதை ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள கணினி ஆய்வகம் மற்றும் வகுப்பறைகளிலும் ஒட்டி வைக்க வேண்டும். மணற்கேணி செயலியை பயன்படுத்தி அதன் மூலம் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை சிறந்த முறையில் முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update