6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஏழை எளிய மக்களுக்காக இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கொள்கை அடிப்படையில் ஆட்சி செய்கிறோம். நாங்கள் அரசியல் லட்சியவாதிகள். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.
தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் முதல்-அமைச்சர் செயல்பட்டு கொண்டிருக்கிறார். உள்ளாட்சி அமைப்புகளுக்கு முழுமையான உரிமை பெற்று தரப்படும். தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல. வளர்ந்த மாநிலமாகும்.
மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
நிதி துறையில் ஒற்றை சாளர முறையில் பயனாளிகளுக்கு சலுகைகள் சென்றடைய சீர்திருத்தங்கள் செய்யப்படும்.
காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் ரூ.1000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் கல்லூரி கட்டிடங்கள் அதிக அளவில் கட்டப்பட்டு கல்லூரிகள் மேம்படுத்தப்படும்.
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. மற்றும் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். அத்திக்கடவு - அவினாசி திட்டம் வரும் ஜூன் மாதத்தில் முழுமையாக நிறைவடையும்.
19 சட்ட மசோதாக்கள் இதுவரை நிலுவையில் உள்ளது. இதனால் அரசாணை வெளியிட முடியவில்லை.
பல சட்டங்கள் கவர்னரும், ஜனாதிபதியும் கையெழுத்திடாமல் நிலுவையில் உள்ளதால் அரசாணை வெளியிட முடியாத நிலை உள்ளது.
நிபுணர்கள் குழு துறை வாரியாக கலந்து ஆலோசித்து எங்களுக்கு உதவி செய்கிறார்கள். பல்வேறு அறிவுரைகளையும் வழங்குகின்றன.
இல்லம் தேடி கல்வி திட்டம், குறு-சிறு நடுத்தர தொழில்களுக்கும் நிபுணர்களின் பங்களிப்பு உள்ளது. ஒரு ரூபாய் கூட வாங்காமல் பொருளாதார நிபுணர்கள் சேவை செய்து வருகிறார்கள்.
இவ்வாறு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.