தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இறுதித் தேர்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வரும் ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்து வரும் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய உத்தரவு ஒன்று வந்துள்ளது.
மதிப்பீட்டு தேர்வுகள்
அதாவது சுருக்க மதிப்பீட்டு தேர்வுகள் (Summative Assessment Test) ஆன்லைனில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் வரும் ஏப்ரல் 17 முதல் 21ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 60 மதிப்பெண்கள் கொண்ட தேர்வாக நடைபெறும். இதற்காக ஆசிரியர்களின் மொபைல் போன்களை பயன்படுத்தி கொள்ளலாம். அதேசமயம் ஆஃப்லைனில் தேர்வுகளை நடத்தவும் ஆசிரியர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
க்யூ-ஆர் கோடு முறை
அதாவது, ஒர்க் புக்கில் மதிப்பீட்டு கேள்வித் தாள்களில் இருக்கும் க்யூ-ஆர் (QR Code) கோடுகளை ஸ்கேன் செய்து மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தலாம். மேற்குறிப்பிட்ட தேர்வுகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கவனிக்கும் திறன், எழுத்தாற்றல், பேசும் திறன், படிக்கும் திறன் ஆகியவை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பரிசோதனை செய்யப்படும்.
என்னென்ன பாடங்கள்
கணக்கு பாடத்தை பொறுத்தவரை எண்களை அடையாளம் காணுதல், பொருத்துதல், புரிந்து கொள்ளும் திறன் ஆகியவை பரிசோதிக்கப்படும். சுற்றுச்சூழல் அறிவியல் பாடத்திற்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகியவற்றுடன் சேர்த்து கேள்விகள் கேட்கப்படும். எஞ்சிய பாடங்களில் இருந்து செயல் திட்டங்கள் அளிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எண்ணும் எழுத்தும் திட்டம்
ஆன்லைன் மதிப்பீட்டு தேர்வில் கொள்குறி எனப்படும் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகளாக கேட்கப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் கடந்த ஆண்டு ’எண்ணும் எழுத்தும்’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, 8 வயது வரையுள்ள அனைத்து மாணவர்களும் எழுத, படிக்க, அடிப்படை கணக்கு போட தெரிந்திருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு வசதி
அதுமட்டுமின்றி மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு நடனம், பாடல்கள், கதை சொல்லுதல், பொம்மலாட்டம் ஆகியவற்றின் மூலம் எழுத மற்றும் படிக்கும் திறன்கள் கற்று தரப்படும். இந்த திட்டம் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.
ஆஃப்லைன் முறை
இந்நிலையில் ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் தேர்வுகளால் நேரம் வீணாவதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே ஆஃப்லைனில் தேர்வுகளை நடத்துவதே சரியாக இருக்கும் எனக் கருதி, அதற்கான ஏற்பாடுகளை செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது