ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் தமிழ்ப் பாடத்துக்கான கற்றல் விளைவுகள் செயலி அறிமுக நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இந்நிகழ்வில், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர், செயலியை வடிவமைத்த முதுநிலை விரிவுரையாளர் சரவணக் குமார் ஆகியோர் செயலியை வெளியிட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர் செல்வி பெற்றுக் கொண்டார். கற்றல் விளைவுகளில் திறன் அடைவைப்பெற தமிழ்ப் பாடத்துக்கான செயலியை வடிவமைத்தலும், மதிப்பிடுதலும் என்ற தலைப்பில், முதுநிலை விரிவுரையாளர் சரவணக்குமார் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்த ஆராய்ச்சிக்காக தமிழ்ப் பாடக் கற்றல் விளைவுகளுக்கான செயலியை உருவாக்கியுள்ளார். இச்செயலியில் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் விளைவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 5-ம் வகுப்பில் உள்ள அனைத்துக் கற்றல் விளைவுகளுக்கும் வகுப்பறை செயல்பாடுகள், மதிப்பீட்டு செயல்பாடுகள், பாடநூலில் கற்றல் விளைவுகளுக்கான இடங்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
https://bit.ly/42wMo3N என்ற செயலிக்கான இணைப்பில் இந்த ஆராய்ச்சியின் பரிந்துரைகள் பதியப்பட்டுள்ளன. இது, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கும், ஆசிரியர்களின் கற்பித்தலை வலுப்படுத்துவதற்கும், மாணவர்கள் ஆர்வமுடன் கற்றல் செயல்பாடுகளில் பங்கேற்கவும் உறுதுணையாக அமையும் என மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினர் தெரிவித்தனர்.