அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்தவும், மாணவர் பேரவை அமைப்பை உருவாக்கவும் பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,391 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 53.24 லட்சம் மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த சுமார் 2.3 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி அரசுப் பள்ளியின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளைக் கண்காணிக்க, பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) அமைக்கப்பட வேண்டும்.
இந்தக் குழுவின் உறுப்பினர்களாக பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இருப்பர். பள்ளியின் தேவைகளை அறிந்து திட்டமிடுதல், தரமான கல்வி, பாதுகாப்பான சூழலை உறுதி செய்தல் இதன் நோக்கமாகும். அதன்படி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. எனினும், இவை முறையாக செயல்படாததால் அரசின் திட்டங்கள் பள்ளிக்கு முழுமையாக சென்றடையாத நிலை நிலவுகிறது.
இதை சரிசெய்யும் விதமாக பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்தவும், மாணவர் பேரவை அமைப்பை உருவாக்கவும் கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது; அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்தி மறுகட்டமைப்பு செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜனவரி முதல் வாரங்களில் பயிற்சி:
முதல்கட்டமாக மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு சமூக வளங்களை பயன்படுத்தி பள்ளியை மேம்படுத்துவது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுசார்ந்து முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட அளவிலான 4 ஆயிரம் கருத்தாளர்களுக்கு ஜனவரி 1, 2-வது வாரத்தில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு ஜனவரி 3, 4-ம் வாரங்களில் பயிற்சி தரப்படும்.
இந்தப் பயிற்சி முகாம் முடிந்த பின்பு எஸ்எம்சி குழு உறுப்பினர்கள் பிப்ரவரி முதல் வாரத்தில் தேர்வு செய்யப்படுவர். இது தவிர, வளர்ந்த நாடுகளில் உள்ளதைபோல அனைத்து பள்ளிகளில் மாணவர் பேரவை அமைப்பு (students council) தொடங்கப்பட உள்ளன. இந்த அமைப்பு எஸ்எம்சி குழுவின்கீழ் இயங்கும். இதில் தலைமையாசிரியர், மாணவர்கள், எஸ்எம்சி குழுவில் இருந்து 2 பேர், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இடம்பெறுவர். இந்தக் குழுவின் தலைவர், செயலாளர் உட்பட முக்கிய பொறுப்புகளில் மாணவர்களே இருப்பர்.
குழந்தைகள் வாக்கெடுப்பு மூலம் பேரவைக்கான தலைவர் உட்பட முக்கிய பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய பள்ளி வளாகத்தில் பிரத்தியேக தேர்தல் நடத்தப்படும். அந்தப் பள்ளியின் குழந்தைகள் வாக்கெடுப்பு மூலம் அவர்களைத் தேர்வு செய்வர். இந்தப் பேரவை மூலம் குழந்தைகளின் தேவைகளையும், கருத்துகளையும் அறியமுடியும். இந்தியாவில் குழந்தைநேயப் பள்ளிகளில் இந்த நடைமுறை தற்போது அமலில் உள்ளது. அதற்கு நல்வரவேற்பு இருப்பதால் தமிழகத்திலும் இத்திட்டத்தை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
மாணவர்களுக்கு ஊக்கம்:
இந்த இரு அமைப்புகளுக்கான உறுப்பினர் தேர்வு பிப்ரவரியில் நடைபெறும். இதற்கான வழிகாட்டுதல்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இரு அமைப்புகளும் ஒன்றிணைந்து பள்ளியின் வளர்ச்சிக்கும் தேவையான பிரத்தியேக மேம்பாட்டுத் திட்டத்தைத் தயாரித்து அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்காக பிரத்தியேக செயலி ஒன்று வடிவமைக்கப்பட உள்ளது. அதன் மூலமே அனைத்து விதமான மேம்பாட்டு திட்டப்பணிகளும் கண்காணிக்கப்படும். இது தவிர, மாணவர் பேரவை மூலம் பள்ளிக்கு தேவையான நிதியை திரட்டுதல், விளையாட்டுப் போட்டிகள், கலாச்சார விழாக்களை ஒருங்கிணைத்தல் உட்பட பணிகளும் முன்னெடுக்கப்படும். பள்ளி செயல்பாடுகளில் பங்கெடுப்பதன் மூலம் மாணவர்களும் ஊக்கமடைந்து திறம்பட செயல்படுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.