15 - 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி: 7 முக்கிய கேள்வி, பதில்கள்

இந்தியாவில் திங்கள்கிழமை முதல் சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளது. ''குழந்தைகளுக்கு தடுப்பூசி தேவையா என்பது குறித்து தற்சமயம் புள்ளிவிபரங்கள் அதிகம் இல்லாததால், முறையான அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்'' எனக் கேள்வி ஒன்றுக்கு பிரபல வைரலாஜி நிபுணர் ககன் தீப் காங் பதில் அளித்துள்ளார்.



இந்தியாவில் 15 முதல் 18 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு நாளை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளது. முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர், முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது. கடந்த நவம்பர் மாதம் ஒமிக்ரான் எனப்படும் கொரோனா வைரஸ் திரிபு கண்டறியப்பட்டது.
இந்தியாவிலும் ஒமிக்ரான் தாக்கம் படிப்படியாக உயர்ந்து கொண்டிருப்பதால், குழந்தைகளின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டது.
இதுதொடர்பாக, நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, ` ஜனவரி 3 ஆம் தேதி முதல் சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளது' என்றார். மேலும், ஜனவரி 10ஆம் தேதி முதல் மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், இணை நோய்கள் உள்ள அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கு கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, 15 முதல் 18 வயதுள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான பதிவு தொடங்கியுள்ளது.

தடுப்பூசி ஏற்படுத்திய விவாதம்

அதேநேரம், குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் முடிவை அறிவியல்பூர்வமற்றதாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த தொற்றுநோயியல் மருத்துவர் சஞ்சய் கே ராய் தெரிவித்திருந்தார். இவர் கோவேக்சின் தடுப்பூசி சோதனைகளில் பிரதான அங்கம் வகித்தவர். `குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய நாடுகளின் தரவுகளையும் ஆய்வு செய்ய வேண்டும்' எனவும் சஞ்சய் கே ராய் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக, கொரோனா நோய்த் தொற்றின் தீவிரமானது குழந்தைகளிடையே மிகக் குறைவாக உள்ளதாகவும் பத்து லட்சம் மக்கள் தொகைக்கு இரண்டு இறப்புகள் மட்டும் பதிவானதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த ட்வீட் விவாதப் பொருளாக மாறியதால், தடுப்பூசி திட்டத்துக்கான தேசிய தொழில்நுட்பக் குழுவின் தலைவர் மருத்துவர் என்.கே.அரோரா, சில விளக்கங்களை அளித்தார். ` கொரோனா காரணமாக இந்தியாவில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள்தான். அரசின் இந்த முடிவின் மூலம் சிறுவர், சிறுமிகளைப் பாதுகாக்க முடியும். இவர்கள் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும்போது தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதன்மூலம் அவர்களின் வீட்டில் உள்ளவர்களுக்கும் பரவும். தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் நன்மையே அதிகம்' என்றார்.
 சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ஜெயந்தி, ` கொரோனா தொற்றின் பல்வேறு திரிபுகளை நாம் பார்த்தாலும் தொற்று குறையவில்லை. அனைத்து மட்டத்திலும் நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதனை குழந்தைகள் நல அகாடமியான ஐஏபி அமைப்பும் பரிந்துரைத்துள்ளது. குழந்தைகளுக்கான தடுப்பூசி பாதுகாப்பது என்பதற்கான தரவுகள் வந்துள்ளன' என்றார்.
7 கேள்விகள், மருத்துவர் ககன்தீப் காங் சொல்வது என்ன?

இந்நிலையில், சிறுவர், சிறுமிகளுக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மத்திய அரசின் கொரோனா பணிக்கு உறுப்பினரும் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் வைரலாஜி துறையின் இயக்குநருமான மருத்துவர் ககன்தீப் காங்கிடம், சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த கல்பாக்கம் வீ.புகழேந்தி சில கேள்விகளை முன்வைத்துள்ளார். இதற்கு மருத்துவர் ககன்தீப் காங் பதிலளித்துள்ளார். அவை இங்கே.

கேள்வி: தற்போதுள்ள சூழலில் 15-18 வயது குழந்தைகளுக்கு அதாவது நலமாக உள்ள (Healthy children) குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது அறிவியல் ரீதியாக சரியாக இருக்குமா?
பதில்: ''தடுப்பூசிகள் பலன் அளிக்கும் என்பதால், எதிர்காலத்தை கணக்கில் கொண்டும் பள்ளிகள் அதை வலியுறுத்தக்கூடும். நலமாக உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி தேவையா என்பது குறித்து தற்சமயம் புள்ளிவிவரங்கள் அதிகம் இல்லாததால், அதுகுறித்து முறையான அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். தற்போதுள்ள திறன் குறைந்த (Sub-optimal) தடுப்பூசிகளை பயன்படுத்துவதைக் காட்டிலும், ஆய்வுகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்".

கேள்வி: இந்தியாவில் 15-18 வயதுள்ள குழந்தைகள் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்? எத்தனை பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர், எத்தனை பேருக்கு இணை நோய்கள் இருந்தன என்பன போன்ற விவரங்கள் பொதுவெளியில் உள்ளதா?
பதில்: ''நான் இதுகுறித்த புள்ளிவிவரங்களை அரசிடம் கேட்டும் 15-18 வயதுக்கு இடைப்பட்ட வயதில் உள்ள குழந்தைகளின் இறப்பு குறித்து மட்டும் தெரியப்படுத்தியுள்ளனர். அது மிகக்குறைவே. இருப்பினும் அந்தக் குழந்தைகளுக்கு இணைநோய்கள் உள்ளதா என்ற முக்கிய புள்ளிவிவரத்தை அரசு வெளியிடவில்லை".

கேள்வி: முதலில் கொடுக்கப்படும் தடுப்பூசிகள் பின்னர் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தியை தீர்மானிப்பதால், Original antigenic sin எனும் பிரச்னை (இதன் காரணமாக உடலில் பின்னர் பாதிப்புகள் ஏற்படும்) கோவேக்சினில் ஏற்பட வாய்ப்புள்ளதா?
பதில்: ``வாய்ப்புள்ளது (Feasible). அது முறையாக ஆராயப்பட வேண்டும்''.

கேள்வி: கோவேக்சின் செலுத்தும்போது நிகழ வாய்ப்புள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முறையான தரவுகள் உள்ளதா?
பதில்: `` அரசு அத்தகைய பாதுகாப்பு (Safety data) குறித்தான புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படும் என உத்தரவாதம் அளித்தாலும், கடந்த 11 மாதங்களில் அதுமுறையாக சேகரிக்கப்படவில்லை என்றே எனக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்டகால தடுப்பூசி பாதுகாப்பு குறித்தான புள்ளிவிவரங்கள் தேவை''.

கேள்வி: தற்போது ஒமிக்ரான் தொற்று அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி, பிரதான காரணியாக இருப்பதால் (Dominant strain) அது தடுப்பூசிகளுக்கு சரியாக கட்டுப்படுவதில்லை என்பதால் கோவேக்சின் எதிர்பார்த்த பலனை கொடுக்காமல் போக வாய்ப்புள்ளதா?
பதில்:
``பொதுவாக மரபணு பிறழ்வு காரணமாக ஒமிக்ரான் தொற்று தடுப்பூசிகளுக்கு சரியாக கட்டுப்படுவதில்லை. கோவேக்சினுக்கும் அதே நிலைதான். ஆக, அதுகுறித்தான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். தடுப்பூசிகளின் திறன் குறிப்பிட்ட காலத்துக்குப்பின் குறைவதால், தடுப்பூசிகள் மேற்கொண்டு தேவையா என ஆராயப்பட வேண்டும்".


கேள்வி: தடுப்பூசிகளின் பயன்பாடு வைரஸில் மரபணு பிறழ்வை ஏற்படுத்துமா?
பதில்: ''இல்லை. ஆனால், நோய் எதிர்ப்புத்திறன் குறைந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் மரபணு பிறழ்வடைய வாய்ப்புள்ளதால், நோய் எதிர்ப்புத்திறன் குறைந்தவர்களை வகைப்படுத்தி, அவர்களுக்கு தடுப்பூசி கொடுக்கும்போது, அவர்களைத் தொடர் கண்காணிப்பில் வைத்து மாற்றம் நிகழ்கிறதா என்பது ஆராயப்பட வேண்டும்".

கேள்வி: தடுப்பூசியின் சாதக, பாதகங்களை கணக்கில் கொண்டால் கோவேக்சினில் பாதகம் அதிகம் உள்ளதாக மருத்துவர் சஞ்சய்ராய் (Epidemiologist-AIIMS-கோவேக்சின் ஆய்வில் ஈடுபட்டவர்) சொல்வது குறித்து உங்களின் கருத்து என்ன?
பதில்: தடுப்பூசிகள் காரணமாக தீவிர பின்விளைவுகள் நிகழ்ந்தாலும், உயிரிழப்புகள் மிகக் குறைவு என்பதால் சாதகங்கள் அதிகமாகவே இருக்கக்கூடும்.

- இவ்வாறு மருத்துவர் ககன்தீப் காங் பதில் அளித்துள்ளார்.

0 Comments:

Post a Comment