ஜனவரி 31க்குள் 10, +1 தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல்: தேர்வுத்துறை உத்தரவு!

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிப்பு பணிகளை ஜன.31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.



இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடப்பு கல்வி ஆண்டில் (2021-2022) 10, பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிக்கும் பொருட்டு அவ்விவரங்களை ஜன.19-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யுமாறு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஒருசில பள்ளிகளில் மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதில் சில சிரமங்கள் ஏற்படுவதாகத் தெரிய வருகிறது.

இதனால், மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கும், கட்டணத்தை செலுத்துவதற்கும் ஜன.21 முதல் 31 வரை கூடுதலாக காலஅவகாசம் அளிக்கப்படுகிறது.

இதுவே கடைசி வாய்ப்பு ஆகும். இதன் பிறகு எக்காரணம் கொண்டும் அவகாசம் வழங்கப்பட மாட்டாது.

எனவே, அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகளும், தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, 10 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிக்கும் பணியை ஜன.31-க்குள் முடிக்குமாறு அறிவுரை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

0 Comments:

Post a Comment