ஆட்சியர் அலுவலகங்களிலேயே சான்றிதழ் சரிபார்ப்பு: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல்



முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலேயே சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை செய்யத் திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.


இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் யங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில் 2022-ம் ஆண்டுக்கான இளம் தொழில்முனைவோர் மாநாடு சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:


திமுக அரசு இளைஞர்களுக்கு நம்பிக்கை தரக்கூடியதாக உள்ளது. தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கவே ஒற்றைச்சாளர முறை உள்ளிட்ட திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அதன் பலனாக தமிழகம் இதுவரை ரூ.70 ஆயிரம் கோடி தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளது.



தமிழகத்தில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவது குறித்து விழிப்புணர்வு தேவைப்படுகிறது. எனவே, இளைஞர்கள் காப்புரிமை பெறுவது குறித்து தெரிந்து கொள்வது அவசியம். மேலும், முதல் தலைமுறை தொழில்முனைவோர் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.


பின்னர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:


கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்து, முதல்வரின் வழிகாட்டுதல்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


அண்மைக் காலமாக பள்ளி ஆசிரியர்களிடம், மாணவர்கள் தவறான முறைகளில் நடந்து கொள்ளும் சம்பவங்கள் வருத்தம் அளிக்கின்றன. ஆசிரியர்கள்தான் மாணவர்களுக்கு இரண்டாவது பெற்றோராகத் திகழ்கின்றனர். எனவே, மூர்க்கமாகச் செயல்படும் மாணவர்களை ஆசிரியர்கள்தான் திருத்த வேண்டும்.


மேலும், கரோனா காலத்துக்குப் பின்பு பள்ளி மாணவர்களிடம் மனரீதியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றை சரிசெய்யும் வகையில், பள்ளிகளில் மாணவர்களுக்கு உரிய உளவியல் ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தமிழக தேர்வுத் துறை வழங்கியதுபோன்ற போலிச் சான்றிதழ் தயாரித்து, அஞ்சல் துறை உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளில் சேர்ந்துள்ள வட மாநிலத்தவர் கண்டறியப்பட்டுள்ளனர். இதேபோல, அரசு அலுவலகங்களில் இருந்து அதிக அளவிலான சான்றுகள் சரிபார்ப்புக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இனிவரும் காலங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலேயே சான்றிதழ்களை சரிபார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.


விரைவில் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்


0 Comments:

Post a Comment