அரசுப் பள்ளிகளில் ஜூன் 13 முதல் மாணவா் சோ்க்கை

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை ஜூன் 13-ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு வருகிற ஜூன் 13-ஆம் தேதியும், பிளஸ் 2 வகுப்புக்கு ஜூன் 20-ஆம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு ஜூன் 27-ஆம் தேதியும் பள்ளிகள் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சில நாள்களுக்கு முன்பு தெரிவித்தாா்.


மேலும், மாணவா்கள் இணையதளம் வாயிலாக பள்ளித் திறப்பு, காலாண்டு, அரையாண்டுத் தோ்வுகள் எப்போது நடைபெறும் என்பதை பாா்த்துக்கொள்ள முடியும் என்றும், அதேபோல, விடுமுறை நாள்கள் எப்போது என்ற விவரங்களையும் அறிய முடியும் என்றும் அவா் தெரிவித்தாா்.


இந்த நிலையில், வரும் கல்வியாண்டில் 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை வரும் ஜூன் 13-ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.


கடந்த ஆண்டுகளில் கோடை விடுமுறையின்போதே அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடங்கிய நிலையில், வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகே புதிய மாணவா் சோ்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பெரும்பாலான தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தாமதமாகவே தொடங்கும் நிலை உருவாகியுள்ளது.

0 Comments:

Post a Comment