பள்ளிக்கே வராத மாணவர்களுக்கு தேர்ச்சி சாத்தியமா?

எட்டாம் வகுப்பு வரை தொடர்ந்து பள்ளிக்கு வராத மாணவர்களை இடைநின்ற மாணவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டுமென கோரிக்கை கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் கடந்த இரு ஆண்டுகளாக அனைவருக்கும் கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது. மீண்டும் பள்ளிகள் முழுமையாக செயல்படத்துவங்கி, இறுதித்தேர்வுகளும் முடிவடைந்து விட்டன.

இந்நிலையில்,'எமிஸ்' இணையதள வருகை பதிவேட்டில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள, அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பில் நீண்ட நாள் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களை நீக்கம் செய்யக்கூடாது.


அனைத்து பணிகளையும் முடித்து தேர்ச்சி ஒப்புதல் வழங்குவதற்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமெனவும், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.பள்ளிக்கு நீண்ட நாள் வராத, தேர்வு எழுதாத குழந்தைகளையும் தேர்ச்சி பட்டியலில் சேர்த்து உயர் வகுப்பிற்கு அனுப்பி வைப்பது எந்த வகையில் சாத்தியம் என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

அரசாணையின் படிசெயல்படணும்!



இது குறித்து, பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் தரப்பில் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
கல்வித்துறையின் அரசாணை, 2017ன் படி, 75 சதவீத வருகைப்பதிவு இருந்தால், ஆண்டு இறுதித்தேர்வாவது எழுதி இருந்தால் அல்லது ஆண்டு இறுதியில் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரிந்தால் ஆறு முதல் எட்டு வகுப்பு மாணவர்களுக்கு, 75 சதவீத வருகைப்பதிவை கணக்கில் கொள்ளாமலே தேர்ச்சி வழங்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர, ஒரு மாணவர் தொடர்ந்து, 7 நாட்கள் பள்ளிக்கு வரவில்லை எனில் வகுப்பு ஆசிரியர் பெற்றோரை விசாரிக்க வேண்டும். அடுத்த 7 நாட்கள் வரைவில்லை எனில் தலைமையாசிரியர் தலையிட வேண்டும். அடுத்த, 7 நாட்கள் வரவில்லை எனில் பள்ளி பெற்றோர், ஆசிரியர் கழகம், உள்ளாட்சி பிரதிநிதிகள் விசாரித்து குழந்தை தொடர்ந்து பள்ளிக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தொடர்ந்து, 30 நாட்கள் வராத மாணவர்களை, இடைநின்ற மாணவர் பட்டியல் கொண்டு சேர்த்து நீக்கம் செய்ய வேண்டும். சில ஆண்டுகள் தொடர்ந்து பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு அடுத்தடுத்த உயர் வகுப்புகளுக்கு தொடர்ந்து தேர்ச்சி அளித்து அவர் இடைநின்ற மாணவர் என்ற கணக்கிற்கே கொண்டு வரப்படாமல் இருப்பது சரியல்ல.

ஊரடங்கில் 'ஆல்பாஸ்' நடைமுறை சரியாக இருந்தது. தற்போது பள்ளிகள் முழுமையாக இயங்குகின்றன. இந்நேரத்தில், பள்ளிக்கே வராத எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை 'ஆல்பாஸ்' மூலம் அடுத்த வகுப்புக்கு கொண்டு செல்வது பல நடைமுறை சிக்கல்களை உருவாக்குகிறது. மீண்டும், 2017 அரசாணையின் படி பழைய நடைமுறையினை கொண்டு வர கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு,அவர்கள் கூறினர்.

ஒரு மாணவர் யாரென்றே தெரியாமல், தொடர்ந்து பெயர் மட்டும் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவர்களை 'எமிஸ்' தளத்தில் இடைநிற்றல் பட்டியலில் சேர்க்கப்பட்டால்தான், ஆசிரியர் பயிற்றுநர்கள், அதுபோன்ற மாணவர்களை மீண்டும், பள்ளியில் சேர்க்கும் முயற்சியை மேற்கொள்வர்.

0 Comments:

Post a Comment