மாநில அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு-முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின். பின்னர் சுதந்திர தின உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:

எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது. விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஒய்வூதியத்தொகை இன்று முதல் 18 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

குடும்ப ஒய்வூதியம் ரூ.9,000 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். வழித் தோன்றல்களுக்கான மாதாந்திர சிறப்பு ஒய்வூதியம் ரூ 9,000 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஒய்வூதியர்களுக்கு 1.07.22 முதல் அகவிலைப்படி 31% இருந்து 34% உயர்த்தி வழங்கப்படும்.

இதன்மூலம் 16 இலட்சம் பேர் பயன்பெறுவர். அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,947 கோடி  கூடுதலாக செலவாகும்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டுகால தொடர் பங்களிப்பு குறித்து எதிர்கால இளம் சமுதாயம் அறிந்துகொள்ளும் வகையில் விடுதலை நாள் அருங்காட்சியகம் சென்னையில் அமைக்கப்படும்.

எளிமை, இனிமை, நேர்மை, ஒழுக்கம், மனித நேயம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறார் அண்ணல் காந்தியடிகள்.

இன்றைக்கு நாட்டுக்கு அவசிய, அவசரமான கொள்கைகள் இவைதான். இத்தகைய அனைத்து மனித நேயக் கொள்கைகளும் கொண்ட திராவிட மாடல் ஆட்சியைத்தான் நாம் நடத்தி வருகிறோம்.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வழித்தோன்றல்களுகக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும். அவர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இனி ரூ.10ஆயிரம் வழங்கப்படும். காசியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கப்படும்.

கடந்த ஓராண்டில் தமிழக பல்துறை சார்ந்த வளர்ச்சியை சந்தித்து வருகிறது. மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம், வேளாண்மைக்கு தனி பட்ஜெட் என உள்ளிட்ட சாதனைகளை திமுக அரசு நிகழ்த்தி வருகிறது. செஸ் விளையாட்டுப் போட்டியையும் சிறப்பாக நடத்திக் காட்டியிருக்கிறோம் என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.


Click here to Join WhatsApp group for Daily kalvi news

0 Comments:

Post a Comment