1,460 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி: ஆர்வமுள்ளவர்களை தேர்வு செய்ய உத்தரவு

 தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் தொன்மைகளின் சிறப்புகளை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்காக 1,460 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி அளிக்க இருப்பது தொல்லியல் ஆர்வலர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் கட்டிடக்கலை, கல்வெட்டுகள், பாசன கட்டுமானங்கள், கலைகள் மூலம் தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரங்கள், தொன்மைகளை அறிய முடிகிறது. இவற்றைப் பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் வகையிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 1,000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் குறித்து உண்டு உறைவிடப் பயிற்சி அளிக்கப்படும் என கடந்த ஏப்ரலில் தமிழக அரசு அறிவித்தது.


அதன் தொடர்ச்சியாக, தொல்லியல் ஆர்வமுள்ள பட்டதாரி ஆசிரியர்களை பயிற்சிக்கு தேர்வு செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் அளிக்கப்பட உள்ளதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு அறிவித்திருப்பது தொல்லியல் ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இது குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் ஆ.மணிகண்டன், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: தமிழர்களின் தொன்மைகளை பாதுகாக்கும் வகையிலும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் வகையிலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொல்லியல் பயிற்சியளிக்க வேண்டும் என மாநில தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.


அவரது பரிந்துரையின்பேரில், 1,000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. தற்போது, முதல்கட்டமாக தொல்லியல் ஆர்வமும், அனுபவமும் கொண்ட பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 1,460 ஆசிரியர்கள் பயிற்சி பெற உள்ளனர்.


இவர்களுக்கு 6 நாட்கள் உண்டு உறைவிடப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், களப்பயணமும் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். மேலும், இந்த பயிற்சியில், பட்டதாரி ஆசிரியர்கள் என்று சுருக்காமல் ஆர்வமுள்ள அனைத்து வகை அரசுப் பள்ளி ஆசிரியர்களையும் சேர்க்க வேண்டும். பயிற்சிக்குப் பிறகு அந்த ஆசிரியர்கள் பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றங்களை அமைக்குமாறு அரசு அறிவுறுத்த வேண்டும் என்றார். இவர்களுக்கு 6 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. களப்பயணமும் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

0 Comments:

Post a Comment