ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு TET தேவையில்லை - பள்ளி கல்வி பணி விதி ரத்து - ஐகோர்ட்

 

கடந்த 2011 ஜூலை 29க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும், பணியில் நீடிக்கவோ, ஊக்க ஊதியம் பெறவோ தடையில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.


இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம், 2009ல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, பள்ளிகளில் ஆசிரியராக நியமிக்கப்படுபவர், அதற்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டது.


அதுகுறித்த அறிவிப்பாணையை, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், 2011ல் பிறப்பித்தது.

காலவரம்பு


இந்நிலையில், 2011க்கு முன் பணியில் நியமிக்கப்பட்டு, தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதியம் நிறுத்தப்பட்டது. தகுதி தேர்வு தேர்ச்சியை வலியுறுத்தாமல், ஊக்க ஊதியம் வழங்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில், ஆசிரியர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.


இம்மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், 'தகுதி தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள், பணியில் தொடர்வதற்கும், ஊக்க ஊதியம் பெறவும் உரிமை இல்லை' என உத்தரவிட்டது.


இடைநிலை ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிப்பதற்கான கவுன்சிலிங் தள்ளி வைத்ததை எதிர்த்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற உரிமையில்லை' என உத்தரவிட்டது.


தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மேல்முறையீடு செய்தனர். '2011 ஜூலைக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, தகுதி தேர்வை வலியுறுத்தக் கூடாது' என்று, வேறொரு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பள்ளி கல்வித் துறை சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.


இம்மனுக்களை விசாரித்த, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:


கடந்த 2012 முதல் 2019 வரை, 33.20 லட்சம் பேர் தகுதி தேர்வில் பங்கேற்றுள்ளனர். இவர்களில், 1.31 லட்சம் பேர் தான் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


ஆசிரியர் பணியில் நீடிப்பதற்கு, தகுதி தேர்வு தேர்ச்சியை கட்டாயமாக்கினால், ஒரு லட்சத்துக்கும் மேல் ஆசிரியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும்; மாணவர்களின் படிப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.


கட்டாயக் கல்வி உரிமை சட்டத்துடன், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் பிறப்பித்த அறிவிப்பையும் பார்த்தால், 2011 ஜூலை 29க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், தகுதி தேர்வு தேர்ச்சியை பெற்றிருக்கவில்லை என்றாலும் பணியில் தொடரலாம் என்பதை தெளிவாக்குகிறது.


அவர்களுக்கு ஊக்க ஊதியம், இதர சலுகைகளும் வழங்க வேண்டும்.


சட்டம் அமலுக்கு வந்த பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தான், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற கால வரம்பு அளிக்கப்பட்டு உள்ளது.


ரத்து


எனவே, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவில்லை என்றாலும், 2011 ஜூலை 29க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியில் நீடிக்க முடியும்; ஊக்க ஊதியம் பெற முடியும்.


அதே நேரத்தில், இடைநிலை ஆசிரியர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியராக, தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


இல்லையென்றால், பதவி உயர்வு பெற தகுதி இல்லை. கடந்த 2011 ஜூலை 29க்கு பின், இடைநிலை ஆசிரியர்களாக, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களும், இடைநிலை ஆசிரியராக இருந்து பதவி உயர்வில் பட்டதாரி ஆசிரியராக வந்தவர்களும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பட்டதாரி ஆசிரியராக நேரடியாக தேர்வு பெற, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், பதவி உயர்வில் வர தகுதி தேர்வு தேவையில்லை என்றும் போடப்பட்ட, பள்ளி கல்வி பணி விதி ரத்து செய்யப்படுகிறது.


அதனால், இடைநிலை ஆசிரியரில் இருந்து பதவி உயர்வு வாயிலாக, பட்டதாரி ஆசிரியராக நியமிக்கப்பட, தகுதி தேர்வு தேர்ச்சி கட்டாயமாகிறது.


இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

0 Comments:

Post a Comment