மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை இரு மடங்காக உயர்த்தியது தமிழக அரசு

 

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான கல்வி உதவித் தொகை இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பல்வேறு நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு 2013-2014ம் நிதியாண்டு முதல் அவர்களின் கல்வியினை மேம்படுத்தும் வகையில் 1ம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் வகுப்பிற்கு ஏற்றவாறு கல்வி உதவித்தொகை குறைந்தபட்சம் ரூ.1000 முதல் ரூ.7000 வரை வழங்கப்பட்டு வந்தது.


இந்நிலையில், 2023-2024-ஆம் நிதியாண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மானியக்கோரிக்கையின்போது முதல்வரால்“மாற்றுத்திறன் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும்” என்று வெளியிடப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையினை இருமடங்காக உயர்த்தி வழங்கப்படுகிறது.


இதன்படி, 1-முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1,000 என்பதனை ரூ.2,000 ஆகவும், 6ம் முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.3,000 என்பதனை ரூ.6,000 ஆகவும், 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.4000 என்பதனை ரூ.8000 ஆகவும், இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.6,000 என்பதனை ரூ.12,000 ஆகவும், முதுகலை பட்டம் மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.7,000 என்பதனை ரூ.14,000 ஆகவும் வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


இதனால் சிறப்புக்கல்வி பெறும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி நிலையினை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் மாற்றுத்திறனாளி மாணவ,மாணவியர்கள் இவ்வுதவித்தொகையினை பெறுவதற்கு பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்விண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மூலம் பரிசீலனை செய்யப்பட்டபின் கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

0 Comments:

Post a Comment