அனைத்து மாணவர்களுக்கும் Aadhaar போலவே "APAAR Card" - முழு விவரம்

 ஒரே நாடு ஒரே அடையாள எண் என்னும் புதிய திட்டத்தை பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. அந்த வகையில் மாணவர்களுக்கான நிரந்தர அடையாள எண் உருவாக்கப்பட உள்ளது. 


ஒரே நாடு ஒரே ஐ.டி. என்னும் புதிய திட்டத்தை பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. அந்த வகையில் மாணவர்களுக்கான நிரந்தர அடையாள எண் உருவாக்கப்பட உள்ளது. 

ஒரே நாடு - ஒரே நுழைவுத் தேர்வு; ஒரே நாடு - ஒரே ரேஷன்; ஒரே நாடு - தேர்தல் உள்ளிட்டவற்றின் வரிசையில் மத்திய அரசு, ஒரே நாடு - ஒரே அடையாள எண் என்னும் புதிய திட்டத்தை பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது.  இது தானியங்கி நிரந்தர கல்வி கணக்கு பதிவு (Automated Permanent Academic Account Registry  - APAAR) என்று அழைக்கப்பட உள்ளது. சுருக்கமாக அபார் என்று அழைக்கப்படுகிறது. எனினும் இதை உருவாக்க மாணவர்களின் பெற்றோரிடம் அனுமதி பெற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


அபார் ஐடி: என்ன செய்யும்?


ஆதார் அட்டையைப் போலவே ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக அபார் ஐ.டி. உருவாக்கப்படும். இதில் சம்பந்தப்பட்ட மாணவரின் கல்வி வளர்ச்சி, சாதனைகள் மற்றும் பிற விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும். 


இதுதொடர்பாக மத்தியக் கல்வி அமைச்சகம் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அதில் மாணவர்களுக்கு, ஆதார் அட்டையை அடிப்படையாகக் கொண்டு அபார் ஐடி உருவாக்கப்பட வேண்டும் என்றும் யுடிஐஎஸ்இ (UDISE)-ல் ரத்த வகை, உயரம், எடை ஆகியவையும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  


தனிப்பட்ட அடையாள எண்


ஒரு மாணவருக்கு அவரின் மழலையர் கல்வியில் தொடங்கி உயர் கல்வி வரை, அபார் எனப்படும் தனிப்பட்ட அடையாள எண் பயன்படுத்தப்படும். வாழ்நாள் முழுவதும் இந்த அடையாள எண் செயல்படும். இதன் மூலம் தேர்வு முடிவுகள், கற்பித்தல் விளைவுகள், படிப்பு தவிர்த்து பிற கலை செயல்பாடுகள், சாதனைகள், ஒலிம்பியாட் தேர்வு சாதனைகள் உள்ளிட்டவை பதிவேற்றம் செய்யப்படும். அத்துடன் ஒரு பள்ளியில் இருந்து இன்னொரு பள்ளிக்கு மாணவர் மாறும்போது, புதிய சேர்க்கையின்போது ஏற்படும் சிரமங்கள் வெகுவாகக் குறையும். 


பாதுகாப்பு காரணங்கள் 


மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் எக்காரணம் கொண்டும், பொது வெளியில் பகிரப்படாது என்று மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது. இதை உருவாக்க மாணவர்களின் பெற்றோரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. எனினும் பெற்றோர் தேவைப்படும்போது விருப்பத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.


அபார் அடையாள எண்ணில் இருக்கும் தகவல்கள், தேவைப்படும்போது மட்டும் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும். மாணவர்களிடம் இருந்து சேகரிக்கப்படும் தரவுகள், கல்வி தளத்தில் மொத்தமாக சேகரிக்கப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்படும். 


ஆசிரியர்கள் எதிர்ப்பு


எனினும் இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கெனவே உள்ள கல்வி அல்லாத ஆதார் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் தாண்டி, தற்போது அபார் பணியையும் ஆசிரியர்களே மேற்கொள்ள வேண்டி இருக்கும் என்பதால், கற்பித்தல் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். 


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

0 Comments:

Post a Comment