அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் மாணவர்களின் திட்டத்துக்கு ரூ.1 லட்சம் பரிசு

 


 

அரசு அலுவலகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் மாணவர்களின் சிறந்த 10 திட்டங்களுக்கு (ப்ராஜக்ட்) தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குநர் உமா சங்கர் தெரிவித்தார்.


தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் ‘நான் முதல்வன் நிரல் திருவிழா’ பயிற்சி பட்டறை கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.


கூட்டத்துக்கு தலைமை வகித்து உமாசங்கர் பேசியதாவது: "மாணவர்களிடையே ஒளிந்திருக்கும் திறன்களை வெளிக்கொண்டு வந்து அவர்களை தொழில் நுட்ப ரீதியாக மேம்படுத்தவும், புதிய வேலை வாய்ப்பு மற்றும் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கத்திலும் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.


‘நிரல் திருவிழா’ என்பது உள்ளூர் தேவைகளுக்கேற்ப தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி புத்தாக்க சிந்தனையின் மூலம் மாணவர்கள் புதிய பொருட்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதாகும். இதற்காக ‘நிரல் திருவிழா - நான் முதல்வன்’ என்ற பெயரில் பிரத்யேக வலைதளம் உருவாக்கப் பட்டுள்ளது.


இதில் அரசு மற்றும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பதிவேற்றலாம். ஒவ்வொரு துறையும் அரசு குறிப்பிட்ட 10 தலைப்புகளில் தொழில் நுட்ப பிரச்சினைகள் குறித்து பதிவேற்ற வேண்டும். வலைதளத்தில் குறிப்பிடப்படும் தரவுகள் மாணவ சமூகத்தினரிடையே புதுமையான சிந்தனைகள் மற்றும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும்.


இப்புத்தாக்க பயிற்சி பட்டறையில் உயர்கல்வி மாணவர்கள் நடப்பாண்டில் புதிய கண்டுபிடிப்பு செய்வதற்கு தேவையான ‘புத்தாக்க தேவைகள், பிரச்சினைகளை கண்டறிதல்’ என்பதற்கான பயிற்சி மற்றும் செயலாக்கம் நடைபெறும். இந்த பயிற்சியை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.


அரசு அலுவலகத்தில் சந்திக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள், தொழில் நிறுவனங்களில் தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகள் குறித்து பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இறுதி ஆண்டு ‘ப்ராஜக்டாக’ கொடுக்க அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அளவில் சிறந்த 40 குழுக்களின் ‘ப்ராஜக்ட்’ தேர்வு செய்யப்பட்டு, முதல் 10 ப்ராஜக்ட்-களுக்கு தலா ரூ.1 லட்சம், 30 ப்ராஜக்ட்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அரசால் வழங்கப்படும்.


‘புத்தாக்க பிரச்சினைகள் தேவைகள்’ குறித்து தாங்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் உயர்கல்வி மாணவர்கள் நடப்பாண்டில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் புத்தாக்க கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

0 Comments:

Post a Comment