அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு வருகிறது களஞ்சியம் செயலி

  தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு முதல் பே சிலிப் வரையான பணிப் பலன்களை எளிதாக்கும் வகையில் களஞ்சியம் செயலி ஜனவரி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.


மாநிலத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் என 12 லட்சம் பேர் உள்ளனர். அரசு பணிகள் திறம்பட நடப்பதற்கு தற்போது ஐ.எப்.ஹெச்.ஆர்.எம்.எஸ்., என்ற ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டம் என்ற சாப்ட்வேர் பயன்பாட்டில் உள்ளது.


அரசு சம்பளம் பெறுவோருக்கு இந்த சாப்ட்வேர் மூலம் தான் தற்போது வழங்கப்படுகிறது. இதுதவிர கல்வித்துறையில் மாணவர்கள், ஆசிரியர், பள்ளிகளின் முழு விவரங்கள் கொண்ட 'எமிஸ்' என்ற இணையதளம் பயன்பாட்டில் உள்ளது.


தற்போது ஒருங்கிணைந்த நிதி மனிதவள மேம்பாட்டு வலைத்தளம், எதிர்கால தேவை கருதி தொழில்நுட்ப ரீதியான மாற்றங்கள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு வருகிறது.


இதன் தொடர்ச்சியாக அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணிப் பலன்களை பெறுவதை எளிமையாக்கும் வகையில் 'களஞ்சியம்' செயலி உருவாக்கப்பட்டுள்ளது. விடுப்பு, சரண்டர் விடுப்பு, பே சிலிப் பதிவிறக்கம், பி.எப்., டிரான்ஸ்பர் ஜாயினிங் என்ட்ரி, இ- எஸ்.ஆர்., ஓய்வூதியத்திற்கு முந்தைய பரிந்துரை, இ சலான் உள்ளிட்ட பணப் பலன்கள் நிலரவம், மருத்துவ காப்பீடு விவரம் என அனைத்து விவரங்களும் இந்த செயலியில் இடம் பெற்றுள்ளன.


பணியில் உள்ள அலுவலர்கள், ஓய்வூதியர்களுக்கு என தனித்தனியே யூசர் நேம், பாஸ்வேர்டு வழங்கப்பட்டு, பணிசார்ந்த செயல்பாடுகளை அரசு ஊழியர்களே மேற்கொள்ளும் வகையிலும், அதற்கான அனுமதி அதிகாரிகள் வழங்கும் வகையிலும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.


இது இன்னும் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி செய்யப்படவில்லை.


அனைத்து பணிகளும் முடிந்த பின் ஜனவரி முதல் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன்படுத்தும் வகையில் செயல் பாட்டிற்கு வரும்.


இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: தற்போது சம்பளம் பில் பதிவேற்றம் செய்வது தொடர்பாக அரசு அலுவலர்கள் ஐ.எப்.ஹெச்.ஆர்.எம்.எஸ்., சாப்ட்வேரில் பணியாற்றுவதற்குள் கடும் மனஉளைச்சலில் தவிக்கின்றனர்.


12 லட்சம் பேருக்கு பதிவேற்றம் செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்டதாக அந்த சாப்ட்வேர் இல்லை என்பதால் அடிக்கடி சர்வர் பிரச்னை ஏற்பட்டு இரவில் பணியாற்றும் நிலை உள்ளது.


இதுபோல் பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் வருகையை எமிஸ்-ல் பதிவேற்றம் செய்வதற்குள் நெட் வொர்க் வசதி, சாப்ட்வேர் பிரச்னையால் ஆசிரியர்களும் படாதபாடு படுகின்றனர். இதுபோன்ற தொழில்நுட்ப சிரமங்கள் இல்லாமல் களஞ்சியம் செயலியை வடிவமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

IMG-20231224-WA0010


Click here for latest Kalvi News 

0 Comments:

Post a Comment