அரசுப் பள்ளிகளில் சாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள் வழங்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு...

 இருப்பிட சான்றிதழ் வழங்கும் வசதி ஒரு மாதத்தில் ஏற்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.


பள்ளிக்கல்வித் துறை சார்பில், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்திய `பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' என்ற மாநாடு கோவையில் நேற்றுநடைபெற்றது. தலைமை வகித்துஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது, "தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.44,042 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு மட்டும் ரூ.1.57,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், அரசுப் பள்ளிமாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்காக மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன" என்றார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாணவர்களுக்கு சாதி, வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்களை பள்ளிகளில் வழங்கும் வசதி ஒரு மாதத்தில் ஏற்படுத்தப்படும். 20 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கு நிலம் நன்கொடை அளித்தவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களை கவுரவப்படுத்தி வருகிறோம்.

திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் அரசுப்பள்ளிகளுக்கு ரூ.448 கோடி மதிப்பில் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித் துறைச் செயலர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், தமிழ்நாடு மாநிலபெற்றோர் ஆசிரியர் சங்க மாநிலத்துணைத் தலைவர் வி.முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆதார் பதிவு தொடக்கம்: கோவை காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு’ என்ற சிறப்பு முகாமை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, ஆதார் பதிவுச் சான்றுகளை மாணவர்களுக்கு வழங்கிய அவர், "வரும் மார்ச் 1-ல் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்குகிறது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம்.

மாணவர்களுக்கு படிப்பில் ஏற்படும் சந்தேகங்கள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். தேர்வுக்கு முதல் நாள் இரவு தூங்காமல், சாப்பிடாமல் தொடர்ந்து படிக்க வேண்டாம். தேர்வு குறித்து பயமோ, பதற்றமோ இருக்கக்கூடாது’’ என்றார்.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

0 Comments:

Post a Comment