என்ன படிப்பது? எங்குப் படிப்பது? அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டுக் குழு - தொலைபேசி எண்ணும் அறிவிப்பு

 வரும் மே 8 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவரவுள்ளது. இந்த நிலையில், மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து விவரிக்க வழிகாட்டுக் குழுவைத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை 3,123 பள்ளிகளில் அமைத்துள்ளது. இது குறித்த வீடியோவை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

12 ஆம் வகுப்பு முடித்தவுடன் என்ன படிப்பது என்ற சந்தேகம் அனைத்து மாணவர்களுக்கும் எழும் ஒன்று தான். மேலும், நான் டாக்டர் ஆக வேண்டும், இன்ஜீனியர் ஆக வேண்டும் என்று கனவுகள் கொண்ட மாணவர்களுக்கு எங்குப் படிக்க வேண்டும் என்ற புரிதல் இருக்காது. இந்த நிலையில், இதற்குத் தீர்வு காண, மாணவர்களுக்கு என்று உயர்கல்வி வழிகாட்டிக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதுமுள்ள 3,123 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டிக் குழுவில் மாணவர்கள் விரும்பிய படிப்பை எந்தக் கல்லூரிகளில் படிக்கலாம். அதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்ற ஆகிய வழிமுறைகள் வழங்கப்படும்.

மேலும், உயர்கல்வி படிக்கக் கல்விக்கடன், உதவித்தொகை ஆகியவற்றை எப்படிப் பெறுவது போன்ற ஆலோசனைகள் வழங்கப்படும். படிப்பிற்கு ஏற்ற அரசுத் திட்டங்களில் உதவித்தொகை பெற்றுப் பயன்பெறுவது குறித்த தகவல்களும் இந்த குழு மூலம் வழங்கப்படும்.

தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் தேர்ச்சி அடையாத மாணவர்கள் கூட இந்த குழுவிடம் தேவையான ஆலோசனையை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத உரிய வழிகாட்டுதலும் ஆலோசனையும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, நேரில் வர முடியாத மாணவர்களுக்குத் தொலைப்பேசி அழைப்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் 14417 என்ற எண்ணிற்குக் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அழைத்து ஆலோசனை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

0 Comments:

Post a Comment