கற்றல் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களை பாராட்ட நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

 

ஆங்கிலச் சொற்களை மாணவர்கள் சரியாக உச்சரிக்கும் வகையில் உரக்கப் படிக்கச் சொல்லி, ஆசிரியர்கள் கற்றுத் தர மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 

சென்னையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான 2 நாள் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி, தொடக்க கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், சமக்ர சிக்ஷா மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அதிகாரிகள் பங்கேற்று பேசினர்.

பின்னர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: சென்னையில், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ஆசிரியர் சங்கங்களையும் அழைத்து 20 மணி நேரம் பேசினோம். இரு தரப்பிலும் கருத்துகளை பறிமாறி கொண்டோம். சங்கங்கள் சார்பில் சுமார் 147 கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அவற்றில் 50க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம்.


 டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்களை மட்டுமே பரிந்துரை செய்ய வேண்டும். போட்டித் தேர்வுகளில் மாணவர்களை கலந்து கொள்ள செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளிகளிலும் உள்ள பிரச்னைகள் குறித்து தலைமை ஆசிரியர்கள் மூலம் அறிந்து அவற்றுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். 38 மாவட்டங்களிலும் மாணவர் சேர்க்கை, கற்றல் கற்பித்தல் பணிகளில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.


கற்றல் பணிகளில் தொய்வு இ ருக்கக் கூடாது. மாணவர்களுக்கு கற்றல் திறன் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய அவர்களை உரக்க படிக்க சொல்ல வேண்டும். 


சில பள்ளிகளில் ஆங்கிலச் சொற்களை படிக்கத் தெரியாமல் மாணவர்கள் திணறும் நிலை இருக்கிறது. அதை போக்க அவர்களை உரக்கப் படிக்க சொல்லித் தர வேண்டும். சரியாக உச்சரிக்க கற்று தர வேண்டும். கற்றல் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களை பாராட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். கற்றலில் சிறப்பாக உள்ள மாணவர்களையும் பாராட்ட வேண்டும். 


மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவிக் கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளைப் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம். அடுத்த ஆண்டில் தேர்ச்சி வீதம் அதிகம் காட்டும் வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும். தமிழ்நாடு தான் கல்வியில் சிறப்பாக உள்ளது என்று பாராட்டுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் துறைக்கு பாராட்டு கிடைக்கும் வகையில் செயல்படுவது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

0 Comments:

Post a Comment